×

போக்குவரத்து நெரிசலை முற்றிலும் தவிர்க்க…தேனி புதிய பஸ் நிலையத்தில் பஸ் வழித்தடங்களில் மாற்றம் கொண்டு வரப்படுமா?

*நகராட்சி நடவடிக்கை எடுக்க பயணிகள் எதிர்பார்ப்பு

தேனி : கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, தேனி நகர் வால்கரடு பைபாஸ் சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க, அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. இப்புதிய கர்னல் ஜான்பென்னிகுக் பஸ் நிலையம் கட்டப்பட்டு, கடந்த 2013ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் முன்பகுதியில் பூங்காவும், பூங்காவை தொடர்ந்து சுமார் 40 அடி அகல ஓடுதளமும், இதனையடுத்து, போர்டிகோவும், போர்டிகோவை தொடர்ந்து முதல் தடமும், இதனையடுத்து, 2வது தடமும் உள்ளது.

முதல் தடத்தில் மதுரை , திருமங்கலம், போடி செல்லும் பஸ்களும்,2வது தடத்தில் திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கம்பம், குமுளி, போடி, மூணாறு செல்லும் பஸ்களும் நிறுத்தப்படுகின்றன. இவ்விரு தடத்தை தாண்டி பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 3வது தடம் உள்ளது. இங்கிருந்து திருப்பூர், கோயமுத்தூர், வருசநாடு மற்றும் டவுன் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. பஸ்நிலையத்தின் வடக்கு பகுதியில் தேனி கலெக்டர் அலுவலகம் செல்வதற்கான திட்டச்சாலை உள்ளது.

இந்த பஸ் நிலையத்தில் 3வது தடமான திருப்பூர், கோயமுத்தூர், வருசநாடு, டவுன்பஸ்கள் நிற்கும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்கள் புதிய பஸ்நிலையத்தின் வடக்கு பகுதியில் உள்ள தேனி கலெக்டர் அலுவலகம் செல்லும் திட்டச்சாலை வழியாக சென்று, ஒரே பாதையில் நுழைந்து, அதேபாதையில் வெளியேறிச் செல்லும் வகையில் பஸ்நிலையம் அமைந்துள்ளது. 3வது தடத்திற்கு திட்டச்சாலையின் வழியாக பஸ்கள் வந்து செல்லும் போது, அடிக்கடி, புதிய பஸ்நிலையம் முன்பாக பஸ்கள் நிற்பதால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேனி புதிய பஸ்நிலையத்தின் 3வது தடத்தில் நிற்கக் கூடிய திருப்பூர், கோயமுத்தூர் பஸ்களை 2வது தடமான திண்டுக்கல் திருச்சி பஸ்கள் நிற்கும் பகுதிக்கு மாற்றிட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

டூவீலர்களால் போக்குவரத்து இடையூறு

இந்த பஸ் நிலைய 3 தடங்களிலும் 69 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு நகராட்சி நிர்வாகம் விட்டுள்ளது. இதில் திடீரென 3வது தடத்தில் நிறுத்தப்பட்ட டவுன்பஸ்கள் தவிர இதர பேருந்துகளை 2வது தடத்தில் நிறுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளதால், ஏற்கனவே, 3வது தடத்தில் உள்ள வணிக கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வரும் வியாபாரிகள் நஷ்டமடையும் நிலை எழுந்துள்ளது.

எனவே, 3வது தடத்தில் கடை நடத்துவோர் மீண்டும் கோவை, திருப்பூர் வழித்தடங்களில் இயங்கக்கூடிய அனைத்து பஸ்களையும் 3வது தடத்தில் இருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். 3வது தடம் அமைந்துள்ள பஸ்நிலையத்திற்கு சென்ற வரும் பஸ்கள் கலெக்டர் அலுவலகம் செல்வதற்கான திட்டச்சாலை வழியாக செல்வதால் இச்சாலையில் உள்ள வணிக கடைகளின் முன்பாக நிறுத்தப்படும் டூவீலர்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும், அந்த சமயங்களில் 3வது தடத்திற்கு வரும் பஸ்களாலும் கடும் நெரிசலை சந்திக்க வேண்டிய அவலம் உள்ளது. இந்நிலையை மாற்ற பயணிகள் புதிய எதிர்பார்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

வணிக கடைகள் கட்டி வழங்கப்படுமா?

இதன்படி, தற்போது திட்டச்சாலை வழியாக 3ம் தடத்திற்கு வந்து செல்லும் கோவை, திருப்பூர் , வருசநாடு ஆகிய பகுதிகளுக்கு வந்து செல்லும் பஸ்களை முதல் தடம் மற்றும் 2ம் தடத்திற்கு மாற்றிவிட வேண்டும். டவுன் பஸ்களை பஸ் நிலைய நுழைவு பகுதியில் உள்ள பூங்காவிற்கும் பஸ்நிலைய கட்டிடத்திற்கும் நடுவே அமைந்துள்ள சுமார் 50 அடி அகல சாலையில் டவுன் பஸ்களை நிறுத்த வேண்டும்.

இதனால் டவுன்பஸ்கள், வருசநாடு உள்ளிட்ட பஸ்கள் பஸ்நிலையத்தின் தென்மேற்கு நுழைவு வாயிலில் நுழைந்து வடக்கு வாயில் வழியாக வெளியேறும் வகையில் பஸ்களை நிறுத்த முடியும். திருப்பூர், கோவை பஸ்களை இடம் மாற்றுவதால் அப்பகுதியில் கடை எடுத்து நடத்துவோர் பாதிக்காமல் தவிர்க்க பூங்காவை தொடர்ந்து டவுன் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் வணிக கடைகள் கட்டி வழங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

டூவீலர் ஸ்டாண்ட் உருவாக்கப்படுமா?

மதுரை மாட்டுத் தாவணி பஸ்நிலையத்தில் பஸ்நிலைய கட்டிடத்திற்கு முன்பாக டவுன்பஸ்களை நிறுத்தி இருப்பது போல தேனி புதிய பஸ்நிலையத்திலும் பூங்காவை ஒட்டிய ஓடுதளத்தில் டவுன்பஸ்களை நிறுத்த வேண்டும். ஏற்கனவே, செயல்பட்ட 3வது தடத்தை ரத்து செய்து, அப்பகுதியில் கட்டண வாகன பார்க்கிங் ஏற்படுத்த வேண்டும். இந்த வாகன பார்க்கிங்கில் குறைந்தபட்ச நேரம் இப்பகுதிக்கு வந்து செல்லும் பயணிகள் தங்களது வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்திச் செல்லும் வகையில் டூவீலர் ஸ்டாண்டு உருவாக்கப்பட வேண்டும்.

இதனையடுத்து, பஸ்நிலைய வடக்கு வாசல் முன்பாக டூவீலரை நிறுத்துவோருக்கு அபராதம் விதித்தால் இச்சாலை போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பயணிகள் எளிதில் பஸ்நிலையம் வந்து செல்ல முடியும் . இதனால் திட்டச்சாலையில் டூவீலரை நிறுத்துவோர் தற்போதுள்ள 3வது தடம் டூவீலர் பார்க்கிங்காக மாற்றும் போது டூவீலர்களை நிறுத்தவும் இடம் கிடைக்கும்.
3வது தடத்தில் தற்போது கடை நடத்துவோருக்கு பூங்கா அருகே டவுன்பஸ்கள், வருசநாடு பகுதி பஸ்கள் நிற்கும் பகுதியில் கடைகள் கட்டுவதோ, இப்பகுதியில் கட்டண கழிப்பறை கட்ட வேண்டும்.

இதன்மூலம் டவுன் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் புதிய வணிக கடைகள், கட்டணக் கழிப்பறை மூலம் வருமானமும், முதலாவது, மற்றும் 2வது தடத்தில் கூடுதலாக கோவை, திருப்பூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படுவதால் இப்பகுதி வணிக கடைகளிலும் வியாபாரம் அதிகரிப்பதோடு, நகராட்சி ஏலம் விடும்போது அதிக தொகைக்கு கடைகள் ஏலம் போகும் வாய்ப்பும் உள்ளது. இதேபோல, திருப்பூர், கோவை பஸ்கள் நின்ற பகுதியில் டூவீலர் ஸ்டாண்ட் உருவாக்குவதன் மூலம் அதிகப்படியான தொகைக்கு ஏலம் விட்டு நகராட்சிக்கு அதிக லாபம் ஈட்டுவதோடு, கலெக்டர் அலுவலகம் செல்வதற்கான திட்டச்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் தவிர்க்க முடியும் என்பதால் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post போக்குவரத்து நெரிசலை முற்றிலும் தவிர்க்க…தேனி புதிய பஸ் நிலையத்தில் பஸ் வழித்தடங்களில் மாற்றம் கொண்டு வரப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Theni new bus station ,Theni ,DMK ,Nagar ,Walkaradu ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை